விழுப்புரத்தில்டிராக்டர் கம்பெனியில் பணம், ஆர்.சி. புத்தகங்கள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் உள்ள டிராக்டர் கம்பெனியில் பணம், ஆர்.சி. புத்தகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதூர்மேல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் லோகநாதன் (வயது 45). இவர் விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் டிராக்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கம்பெனியை அதன் ஊழியர்கள் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை அக்கம்பெனியின் மேற்பார்வையாளர் நவீன்பாலாஜி வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த அலுவலக அறையின் ஷட்டர் கதவை திறந்து பின்னர் கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றபோது மேஜை டிராயரில் இருந்த ரூ.82 ஆயிரம் ரொக்கம் மற்றும் பீரோவில் இருந்த 82 ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் ஆர்.சி. புத்தகங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.