சித்தோட்டில் நூதன முறையில் பண மோசடி; 2 பேர் கைது


சித்தோட்டில் நூதன முறையில் பண மோசடி; 2 பேர் கைது
x

சித்தோட்டில் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

பவானி:

சித்தோடு முதலியார் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 48). இவர் சித்தோடு நால்ரோடு பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். மேலும் அந்தக் கடையில் பணபரிவர்த்தனையும் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த 15-ந் தேதி ஒருவர் வந்தார். அவர் அரவிந்தனிடம், என்னுடைய நண்பர் ஒருவர் உங்களிடம் பேச வேண்டும் என்று கூறி செல்போனை கொடுத்தார்.

மறுமுனையில் அரவிந்தனிடம் பேசிய நபர், தனது பெயர் சண்முகம் என அறிமுகம் செய்து கொண்டதோடு உங்களிடம் வந்திருக்கும் நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், இந்த பணத்தை நான் சொல்லும் குறிப்பிட்ட ஒரு செல்போன் எண்ணுக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரவிந்தன் சம்பந்தப்பட்ட நபருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்.

பின்பு தன்னிடம் பேசிய நபரிடம் பணத்தை கேட்ட போது பணம் என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் மறுமுனையில் பேசியவரிடம் தொடர்புகொண்டு தெரிவிக்க முயன்ற போது அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அரவிந்தனிடம் செல்போனில் பேசி நூதனமுறையில் மோசடி செய்த நபர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா பணியாரக்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 27), அவருக்கு உடந்தையாக இருந்தவர் அதே பகுதியை சேர்ந்த அய்யண்ணன் (51) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சண்முகத்தையும், அய்யண்ணனையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story