பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், சவலூர் கிராமத்தை சேர்ந்்தவர் சுனிதா. இவர் நேற்று காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்னையில் இருந்து தர்மபுரி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். பாலுசெட்டி சத்திரத்தில் பஸ்சில் இருந்து இறங்கியபோது தான் வைத்திருந்த கைப்பையை பஸ்சில் தவறவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சுனிதா தவற விட்ட கைப்பை இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி சுனிதாவை அழைத்து அவரிடம் கைப்பையுடன் அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை காவேரிப்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.