சமூக பாதுகாப்பு திட்டத்தில் மோசடி:கைதான பெண், திருநங்கையிடம் இருந்து ரூ.15 லட்சம் மீட்பு


சமூக பாதுகாப்பு திட்டத்தில் மோசடி:கைதான பெண், திருநங்கையிடம் இருந்து ரூ.15 லட்சம் மீட்பு
x
சேலம்

சேலம்

சேலத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் நடந்த மோசடியில் கைதான பெண் மற்றும் திருநங்கையிடம் இருந்து ரூ.15 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

3 பேர் கைது

சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2020-ம் ஆண்டு கணக்குகள் தணிக்கை செய்தபோது, ரூ.89 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து தாசில்தார் தமிழ்முல்லை அளித்த புகாரின் பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த பாலம்பட்டியை சேர்ந்த பவித்ரா (வயது 21), அரசு நிதி உதவி பெற்று வரும் சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த பயனாளி திருநங்கை சாந்தி, குகையை சேர்ந்த திருநங்கை மாதம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.15 லட்சம் மீட்பு

இவர்களின் வங்கி கணக்கிற்கு மட்டும் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 3 பேரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியது யார்?, கடந்த 3 ஆண்டுகளாக இவர்களின் வங்கி கணக்கிற்கு மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சென்றுள்ளது. இதற்கு முக்கிய நபர்களின் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது, சாந்தியின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைத்த சில நிமிடங்களில் அந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு கும்பல் தலையீடு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதனிடையே, தற்காலிக ஊழியர் பவித்ரா மற்றும் திருநங்கை சாந்தி ஆகியோரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story