ஆத்தூர் அருகேஅரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டுபூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
ஆத்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியை
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 55). இவர் ஆத்தூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா, ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுடைய மகள் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நாகராஜன்-புஷ்பா தம்பதி கடந்த 29-ந் தேதி இரவு சென்னைக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை நாகராஜன் மட்டும் தனியாக பஸ்சில் ஆத்தூருக்கு வந்து தனது வீட்டிற்கு சென்றார்.
30 பவுன் நகை திருட்டு
அப்போது வீட்டின் முன்புற கேட் லேசாக திறந்திருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் படுக்கையறைக்கு சென்று பார்த்தார். அங்கிருந்த மர பீரோ மற்றும் படுக்கை டிராயர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் ஆத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செந்தமிழ் நாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் போலீசார், தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் ஒரு தனிப்படையும், குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தெரிவித்தார்.