கல்லூரியில் பணம் திருட்டு
பழனியில் கல்லூரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருடப்பட்டது.
பழனி கான்வென்ட் ரோடு பகுதியில், மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைநேர கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனியார் கட்டிடத்தில் செயல்படும் இந்த கல்லூரியில் வகுப்பறை மற்றும் அலுவலகம் தனித்தனியாக உள்ளது. பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் அலுவலக பணியாளர்கள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதோடு மேற்கூரையில் சில ஓடுகளும் பிரிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக பீரோவில் சோதனை செய்தபோது, அதிலிருந்த ரூ.40 ஆயிரம் திருடுபோய் இருந்தது. பின்னர் இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.