அனைத்து வங்கிகளுக்குமான சட்டம் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்


அனைத்து வங்கிகளுக்குமான சட்டம் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:46 PM GMT)

2 ஆயிரம் நோட்டு ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை

2 ஆயிரம் நோட்டு ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

பூமி பூஜை

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.30½ கோடி செலவில் புதியதாக கட்டப்பட உள்ள, கூடுதல் ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் (பொ).மணிவண்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லூரி முதல்வர் சத்தியபாமா வரவேற்று பேசினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும்

இதை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

2 ஆயிரம் ரூபாய் பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என்றும் ரேஷன் கடைகள் மட்டுமல்ல அனைத்து கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தலாம். பணமதிப்பு இழப்பு காலங்களில் அ.தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கிகளில் பணத்தை மாற்றியது என தி.மு.க.வே குற்றம் சாட்டியுள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் நடக்காது எனவும் அதுபோல் பணபரிவர்த்தனைகளை கூட்டுறவு வங்கிகள் செய்தால் அதன் அங்கீகாரம் ரத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் .துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரிசுரேஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் .குமரவேல், துணை மருத்துவ அலுவலர் முகமதுரபீக் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story