மரத்தில் பறித்தவுடன் விற்கப்படும் ரசாயன கலப்பில்லாத மாம்பழங்கள்


மரத்தில் பறித்தவுடன் விற்கப்படும் ரசாயன கலப்பில்லாத மாம்பழங்கள்
x
திருப்பூர்


கொழுமம் பகுதியில் ரசாயன கலப்பில்லாமல் மரத்திலிருந்து பறித்தவுடன் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குத்தகை

மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் பகுதியில் பழனி சாலை ஓரம் உள்ள மாந்தோப்புகளில் பறிக்கும் மாம்பழங்களை உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர். குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தம்பதியினர் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றனர். அவ்வாறு பராமரிக்கப்படும் மாமரங்களில் பழுக்கும் மாம்பழங்களை உடனுக்குடன் பறித்து விற்பனை செய்கின்றனர். மேலும் பாதாமி, மல்கோவா, செந்தூரா உள்ளிட்ட ரக மரங்களிலிருந்து நன்கு விளைந்த காய்களை வலையுடன் கூடிய நீண்ட குச்சிகள் மூலம் பறிக்கின்றனர். அவற்றை சாலை ஓரங்களில் வைத்து உடனுக்குடன் விற்பனை செய்வதுடன், அவற்றை இயற்கை முறையில் பழுக்க வைப்பதற்கான வழிகாட்டல்களையும் வழங்குகின்றனர்.

இயற்கை முறை

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நன்கு விளைந்த மாங்காய்களை மரங்களிலேயே பழுக்க விடுகிறோம். இவற்றை கிளிகள், அணில்கள் போன்றவை அதிக அளவில் சேதப்படுத்துகிறது. மேலும் தற்போது காற்றின் வேகம் அதிக அளவில் இருப்பதால் பழங்கள் மட்டுமல்லாமல் காய்களும் அதிக அளவில் கீழே விழுந்து வீணாகிறது. இதனால் இழப்பு ஏற்பட்டாலும் உடலுக்கு தீங்கு தராத இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறோம். லாபம் குறைந்தாலும் மனதுக்கு திருப்தி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சுவையும் மணமும் அதிகமாக இருப்பதால் பலரும் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். ரகத்துக்கு ஏற்றபடி ஒரு கிலோ ரூ 30 முதல் 60 வரை விற்பனை செய்கிறோம். சாலை ஓரத்தில் மட்டுமல்லாமல் உடுமலை உழவர் சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாமரங்களுக்கு அடியிலேயே மணக்க மணக்க மாம்பழங்களை வாங்கி சுவைக்க உதவும் தம்பதிகளுக்கு பலரும் பாராட்டை தெரிவிக்கின்றனர்.


Next Story