சந்தேகத்திற்கு இடமாக பணிபுரியும் 171 தொழிலாளர்கள் கண்காணிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சந்தேகத்திற்கு இடமாக பணிபுரியும் 171 தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 27 கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் தற்போதைய நிலையை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தாசில்தார்களும், துறை சார்ந்த அலுவலர்களும் கண்காணித்து தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
தற்போது கொத்தடிமை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
171 தொழிலாளர்கள்
இதுவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் 171 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களை கண்காணித்து வருவதாகவும் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானவேல், மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.