நகைக்கடைகள் உள்பட 12 நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கரூரில் உள்ள நகைக்கடைகள் உள்பட 12 நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டாய்வு
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில், கரூர் மாவட்ட கண்காணிப்பு குழுவானது கரூர் மேட்டுத்தெரு மற்றும் வளையல்காரத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், நகை தயாரிப்பு தொழில் செய்யும் நிறுவனங்கள் மற்றும் நகை பட்டறைகளில் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டத்தின் கீழ் 12 நிறுவனங்களில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கொத்தடிமை தொழிலாளர் முறையில் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
அபராதம்
கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க 1800 4252 650 என்ற எண்ணிலேயோ அல்லது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுருக்க கோடு எண்ணான 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலேயோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் குழந்தை தொழிலாளர் முறை தொடர்பாக புகார் தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் எனவும், இதுபோன்று தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.