அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு
'தினத்தந்தி' செய்தியைத் தொடர்ந்து கல்லாபுரம் பகுதியில் விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப்பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அச்சுறுத்தல்
உடுமலையையடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமராவதி, உடுமலை, கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, கரடி, புலி, சிறுத்தை, குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது. மலையை ஒட்டிய பகுதியில் உள்ள விளைநிலங்களில் யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் சேதம் தொடர் கதையாகவே உள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் நீண்ட தொலைவு வரை ஊடுருவி பயிர்களை சேதப்படுத்துவதுடன் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியிலிருந்து உணவு தேடி படிப்படியாக வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் அங்கேயே முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பொருளாதார இழப்பு
அந்தவகையில் கல்லாபுரத்தையடுத்த வேல்நகர் பகுதியில் முகாமிட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய், இளநீர், குரும்பல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றன. மேலும் மா, கொய்யா உள்ளிட்ட பல வகைப் பயிர்களையும் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் உடுமலை ஆர்.டி.ஓ.விடம் முறையிட்டனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.விளைநிலங்களில் கூண்டுகளை வைத்து அதனுள் குரங்குகளைக் கவரும் வகையில் பொரி, கடலை போன்ற உணவுப்பொருட்களை வைத்து அவற்றைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூண்டில் சிக்கும் குரங்குகளை பிடித்துச் சென்று அடர் வனப்பகுதியில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வரும் குரங்குகளைப் பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளின் பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்டு, நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்தினத்தந்தி நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.