மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம்
திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம் அடைந்தது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் போளூர் சாலை பகுதியில் குடியிருப்பு வளாகங்களை சுற்றி ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் நேற்று ஒரு குரங்கு போளூர் சாலையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டின் அருகிலுள்ள மின்மாற்றியின் அருகில் மரத்தில் ஏறி சென்றுள்ளது. அப்போது குரங்கு மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. இதனால் அந்த குரங்குக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து நகர முடியாமல் குரங்கு தவித்தது.
இதைக்கண்ட 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அடிபட்ட குரங்கின் அருகில் வந்து நின்று கொண்டு மக்கள் யாரும் அடிபட்ட குரங்கின் அருகில் வராத வகையில் சுற்றி பாசப் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த குரங்கை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
அடிபட்ட குரங்கிற்கு ஆதரவாக மற்ற குரங்குகள் பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.