மதுரையில் ஆயுதங்களுடன் உலா வரும் 'மங்கி குல்லா' திருடர்கள்


மதுரையில் ஆயுதங்களுடன்  உலா வரும் மங்கி குல்லா திருடர்கள்
x

மதுரையில் ஆயுதங்களுடன் உலா வரும் ‘மங்கி குல்லா’ திருடர்கள்

மதுரை


மதுரையில் சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகள் சமீப காலமாக விரிவாக்கம் பெற்று வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கில் வீடுகள் பெருகி மக்கள் குடியேறி உள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மங்கி குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

சுமார் 10 பேர் கொண்ட கும்பலாக உள்ள இவர்கள் 3 பேர் வீதமாக பிரிந்து திருட செல்கின்றனர். வெவ்வேறு பகுதிகளை குறி வைக்கும் இவர்கள் கும்பலாகச் சென்று வெளியில் நோட்டமிடுகின்றனர். ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் இவர்கள் தைரியமாக புகுந்து விடுகின்றனர். கையில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் உலாவரும் இவர்கள், வீட்டுக்குள் உள்ளவரை தாக்கி கொள்ளை அடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நேற்று கோவில் பாப்பாகுடி ஏ.ஆர். சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளையர்கள் அங்குள்ள வக்கீல் ஒருவரின் வீட்டின் கேட் ஏறி குதித்துள்ளனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்குள் உள்ளே குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர். மேலும், கோபத்தில் அவர் மீது கற்களையும் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டியிடமும் நகையை பறித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நேற்று மட்டுமே 4 வீடுகளில் இதே போல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண்சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர். மேலும் கைகளில் கிளவுஸ், தலையில் மங்கி குல்லா, டவுசர் அணிந்தபடி வருகின்றனர். இந்த 'மங்கி குல்லா' திருடர்களால் மதுரை மக்கள் பீதியில் உள்ளனர்.

போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story