தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை


தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
x

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவுகள்

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள், தனியார் பவுண்டேஷன் சார்பில் ரூ.12 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நச்சுயியல் அதிதீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, கிட்டப்பார்வை குறைபாடு உள்ள முதியவர்களுக்கு ரூ.4.5 லட்சத்தில் 2,500 இலவச கண்ணாடிகளை முதற்கட்டமாக 15 பேருக்கு வழங்கினர். பின்னர், அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெஸ்ட் நைல் வைரஸ்

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதுதவிர தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்களை பாதுகாக்க தனி பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிதி திட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்.

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை இல்லை

தமிழகத்தில் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. ஆனாலும் கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர்.

18 வயது முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

சிசு மரணங்கள்

எஸ்.ஆர்.எஸ்.ஐ. என்ற மத்திய அரசு அமைப்பு சிசு மரணங்கள் குறித்து நடத்திய கருத்து கணிப்பில் கேரளா முதலிடமும், தமிழகம் 2-வது இடமும் பிடித்துள்ளது.

எனவே சிசு மரணம் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story