குடியிருப்புக்குள் சுற்றித்திரியும் குரங்குகள்


குடியிருப்புக்குள் சுற்றித்திரியும் குரங்குகள்
x

பழனி அடிவாரத்தில் உள்ள குடியிருப்புக்குள் குரங்குகள் சுற்றித்திரிகின்றன.

திண்டுக்கல்

பழனி அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் சுற்றி திரிகின்றன. யாரேனும் அதை விரட்டினால் அவர்களை கடிக்க வருவது போன்று அச்சுறுத்துகின்றன. குரங்குகள் அச்சுறுத்தலால் தெருக்களில் நடந்து செல்ல குழந்தைகள் அச்சப்படுகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால், பழனி முருகன் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, குரங்குகளால் அச்சுறுத்தல் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில் குரங்குகள் பிடித்து வனப்பகுதிக்குள் விடப்படும். அதேவேளையில் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் குரங்குகள் இயல்பாகவே வனப்பகுதியில் தங்களுக்கான இரையை தேடிக் கொள்ளும். நாம் உணவு வைப்பதால் அதன் இயற்கை இயல்பு மாறக்கூடும். அதேபோல் மலைப்பாதையில் சாலையில் உணவுகளை போடுவதால் அவற்றை உண்ண வரும் குரங்குகள் விபத்தில் சிக்க நேரிடும். எனவே வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.


Next Story