அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டுகள் வைத்து பிடிக்கப்பட்டன


அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டுகள் வைத்து பிடிக்கப்பட்டன
x

அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டுகள் வைத்து பிடிக்கப்பட்டன.

திருச்சி

துவரங்குறிச்சி:

பொருட்களை சேதப்படுத்தின

துவரங்குறிச்சி நகர பகுதியில் உள்ள ரைஸ்மில் தெரு, பூதநாயகியம்மன் கோவில் தெரு, சந்தைப்பேட்டை தெரு, மலைத்தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக அருகில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து வந்த குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதுடன், வீடுகளில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தின.

அதேபோல் வீடுகளின் மீதுள்ள தண்ணீர் தொட்டிகளில் இறங்கி விளையாடுவதோடு, தொட்டியையும் சேதப்படுத்தின. இதனால் வீட்டிற்கு வெளியேயும், மாடியிலும் எந்த ஒரு பொருளையும் வைக்க முடியாததுடன், துணிகளையும் வெளியே காயப்போடுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வீடுகளின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தால், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வந்தன. கடைகளையும் விட்டுவைக்காத குரங்குகள், கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களை கடைக்காரர்கள் கவனிக்காத நேரத்தில், பறித்து சென்று விடுவதும் உண்டு.

கூண்டுகள் வைத்து பிடிக்கப்பட்டன

மேலும் நகர பகுதியில் உள்ள புளியமரம், மா, கொய்யா, சப்போட்டா போன்ற பல்வேறு வகையான மரங்களில் காய்களை குரங்குகள் பறித்து வீசின. இதையடுத்து பல்வேறு வகைகளிலும் குரங்குகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் உடனடியாக குரங்குகளை பிடித்து மலைப்பகுதியில் விடவேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று வனத்துறையினர், குரங்கு பிடிப்பவர்களை அழைத்து வந்து குரங்குகளை பிடித்து வருகின்றனர்.

இதில் குரங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளை கண்காணித்து, தற்போது ரைஸ்மில் தெருவில் உள்ள செல்போன் கோபுரம் அருகே கூண்டுகள் வைத்து அதற்குள் தின்பண்டகளை போட்டு, குரங்குகள் கூண்டுக்குள் வந்தவுடன் கூண்டினை லாவகமாக மூடி குரங்குகளை பிடித்து வருகின்றனர். தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடிக்க உள்ளனர். அந்த குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story