குடிநீர் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு


குடிநீர் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு
x

விராலிமலை அரசு மருத்துவமனையில் உள்ள தண்ணீர் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இ்ங்கு ஒரு பகுதியில் புற நோயாளிகள் பிரிவு உள்ளது. அக்கட்டிடத்தின் மேல் பகுதியில் சுமார் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது.

இதிலிருந்து வரும் தண்ணீரை மருந்தகம் கட்டிடத்தில் தங்கியுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் கழிப்பறை மற்றும் பிற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்ததாகவும், மேலும் இந்த தண்ணீரை சுத்திகரித்து புறநோயாளிகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொட்டியில் இறந்து கிடந்த குரங்குகள்

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இந்த தண்ணீரை ஊழியர்கள் பயன்படுத்தியபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் புற நோயாளிகள் பிரிவு கட்டிட மாடியில் உள்ள குடிநீர் தொட்டியினை பார்த்தனர். அப்போது, அதில் 2 குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து தண்ணீரில் மிதந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையறிந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் தொட்டியில் கிடந்த 2 குரங்குகளின் உடல்களையும் மீட்டு மருத்துவமனை அருகே அடக்கம் செய்தனர். தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி கிருமி நாசினி தெளித்து தொட்டியை தூய்மை செய்தனர்.

பாதுகாப்பான குடிநீர் கிடைக்க...

கடந்த 2 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த குரங்குகளின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியும், இதுகுறித்து கண்டறியப்படாதது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தை காட்டி உள்ளது. இதனால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் குடிநீரை பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் விராலிமலை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள மற்ற குடிநீர் தொட்டிகளையும் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story