குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மாதந்தோறும் உதவித்தொகை -ஐகோர்ட்டு உத்தரவு


குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மாதந்தோறும் உதவித்தொகை -ஐகோர்ட்டு உத்தரவு
x

குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தபின் 3-வதாக பிறந்த குழந்தைக்கு 21 வயது வரை மாதந்தோறும் பராமரிப்பு தொகையைாக ரூ.10 ஆயிரத்தை அரசு செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த வாசுகி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டேன். ஆனால் அதன்பின் நான் கர்ப்பமாகி 3-வதாக குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்து வருகிறார். அவரின் கணவர் விவசாய கூலித்தொழிலாளி. எனவே அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப 2 குழந்தைகள் போதும் என நினைத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துள்ளனர். ஆனாலும் மீண்டும் கர்ப்பமாகி 3-வது குழந்தை பிறந்துள்ளது.

எனவே, மனுதாரரின் பொருளாதார, சமுதாய பின்புலத்தை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம்

3-வதாக பிறந்த குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க வேண்டும். ஏற்கனவே கல்விக்கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த தொகையை அவரது கல்வித்தேவைக்காக திருப்பி செலுத்திவிட வேண்டும். மனுதாரருக்கு 3-வதாக பிறந்த குழந்தை 21 வயது அடையும் வரை அரசுத்தரப்பில் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story