கடமான் இறைச்சி, கள்ள துப்பாக்கி பறிமுதல்


கடமான் இறைச்சி, கள்ள துப்பாக்கி பறிமுதல்
x

தங்கும் விடுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 30 கிலோ கடமான் இறைச்சி மற்றும் அதை வேட்டையாட பயன்படுத்திய கள்ள துப்பாக்கியை கேரள வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

தங்கும் விடுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 30 கிலோ கடமான் இறைச்சி மற்றும் அதை வேட்டையாட பயன்படுத்திய கள்ள துப்பாக்கியை கேரள வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

கள்ள துப்பாக்கி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வன விலங்குகளை வேட்டையாடி விடுதிகளில் தங்கி உள்ள சுற்றுலா பயணிகளுக்கு சமைத்து வழங்கப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பேரியா வனச்சரகம் வரையால் என்ற இடத்தில் வனச்சரகர் சஜுவ், உதவி வனச்சரகர்கள் ஆனந்த், அனீஸ் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மான் இறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கள்ள துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் கள்ள துப்பாக்கி மூலம் கடமான் ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை தங்கும் விடுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மனு (வயது 21), ரின்டோ (32), மகேஷ் (29), சுரேஷ் (42) ஆகிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கடமான் இறைச்சி, வேட்டையாட பயன்படுத்திய கள்ள துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கடமான் இறைச்சியை கடத்தி செல்வதற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விடுதிகளில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு மேலும் சிலரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story