மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்:தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்
தேனி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜானகி (46). கடந்த 19-ந்தேதி ஜானகி, தனது கணவர் தங்கராஜூடன் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மொபட்டில் உப்புக்கோட்டைக்கு சென்றார். தனது பேரன் லட்சணனையும் (3) உடன் அழைத்து சென்றனர். உப்புக்கோட்டை சென்று விட்டு ஊருக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு நாற்றுப்பண்ணை அருகே சென்றபோது, உப்புக்கோட்டையை சேர்ந்த கோடீஸ்வரன் (24) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், இவரது மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த தங்கராஜ், ஜானகி, லட்சணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், கோடீஸ்வரன் மீது பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.