விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் வழங்கிமாவட்ட வளர்ச்சிக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்கள்ளக்குறிச்சி கலெக்டர் வேண்டுகோள்


விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் வழங்கிமாவட்ட வளர்ச்சிக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்கள்ளக்குறிச்சி கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:46 PM GMT)

விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் வழங்கி மாவட்ட வளர்ச்சிக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி


தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர்களுக்கான பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. தனியார் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்துள்ளதால் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும், இதர சிறு, குறு தொழில்களுக்கும், வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்கி மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தனியார் மைக்ரோ பைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களில் அதிக அளவிலான வட்டிவிகிதத்தில் கடனுதவி பெறாமல் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறைந்த அளவிலான வட்டிவிகிதத்தில் கடனுதவிகளை பெற்று தொழில் மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வாங்கிய கடன்களை வங்கிகளில் முழுமையாக திருப்பி செலுத்தி வங்கிகளுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள வங்கி மேலாளர்கள் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதிக கடன் உதவிகளை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கி மாவட்ட வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மத்திய கூட்டுறவு வங்கி உதவிப்பொது மேலாளர் சசிக்குமார், உதவி திட்ட அலுவலர்கள் ராஜா, கமலவள்ளி, நாராயணசாமி, கார்த்திகேயன், மாரிஸ்வரன் மற்றும் வங்கி மேலாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story