மாணவா்களுக்கு அதிகளவில் கல்வி கடன் உதவிகளை வழங்க வேண்டும்
மாணவ-மாணவிகளுக்கு அதிகளவிலான கல்வி கடன் உதவிகளை வழங்க அனைத்து வங்கிகளும் முன்வர வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசினார்.
மாணவ-மாணவிகளுக்கு அதிகளவிலான கல்வி கடன் உதவிகளை வழங்க அனைத்து வங்கிகளும் முன்வர வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசினார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசின் சார்பாக மக்களுக்கு எண்ணற்ற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பெற்று மக்கள் பயன்பெற வேண்டும்.
மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ, நபார்டு, முன்னோடி வங்கி உள்ளிட்ட துறைகள் மூலமாக விவசாயிகளுக்கான கடன், இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் கடன், மாணவ -மாணவிகளுக்கு கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற்கடன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கான கடனுதவி, கைத்தறி நெசவாளர்களுக்கான முத்ராகடன் உள்ளிட்ட கடனுதவி திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வி கடனுதவி
அனைத்து வங்கியாளர்களும், இத்திட்டங்களின் கீழ் தங்களது வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் போது பொதுமக்களை அலை கழிக்காமல் விரைந்து விண்ணப்பங்களை ஆராய்ந்து கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்வி தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியிருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ -மாணவிகளுக்கு அதிகளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க அனைத்து வங்கிகளும் முன்வர வேண்டும்.
கைத்தறி நெசவாளர்கள் முத்ரா கடனுதவி கோரி விண்ணப்பிக்கும் போது வங்கிகளில் அதற்கான தனிமுத்ரா இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கடனுதவி விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு தனிமுத்ரா இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் தான் 20 சதவீதம் மானியம் கிடைத்து கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். ஆகவே இதன் மீது வங்கியாளர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும்.
இந்தியன் வங்கியின் மூலம் அளிக்கப்படும் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நிகழ்கால தேவைகளுக்கேற்ப, அதிகளவிலான கிராமப்புற இளைஞர்கள், மகளிர்கள் பயன்பெறும் வகையில் சுயத்தொழில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை நடத்த வேண்டும்.
கடனுதவி கோரி விண்ணப்பித்து தற்போது வரையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது அந்தந்த வங்கியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜிகுமார், தாட்கோ மேலாளர் அமுதா ராஜ் (பொறுப்பு), வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.