நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்


நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்
x

குறுவை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

குறுவை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.இது குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் நுண்ணூட்டக் கலவை

நெல் விளைச்சலில் நுண்ணூட்டச்சத்தை சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பதன் மூலம் நில வளத்தை பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்க முடியும். மண் பரிசோதனை அடிப்படையில் நெற்பயிருக்கு அடி உரம் மற்றும் வேதியியல் உரங்களை இடவேண்டும். இதனால் தேவைக்கு குறைவான அல்லது அதிகமாக உரம் இடுவதை தவிர்க்கலாம்.ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ ஜிங்ச் சல்பேட்டை மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவேண்டும்.

அதிக மகசூல்

அல்லது வேளாண்மை துறையின் கீழ் வினியோகம் செய்யப்படும் நெல் நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது அடிஉரமாக வயலில் இடுவதன் மூலம் நெல்லில் தூர் பிடிப்பதை அதிகரிக்கும் திறன் அதிகரிக்கிறது. வயலில் ஒரு ஏக்கருக்கு 2.5 டன் தழை உரம் அல்லது நெல் நுண்ணூட்டக்கலவை இடப்பட்டிருப்பின் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ ஜிங்ச் சல்பேட் போதுமானதாகும்.கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை இடவேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணாக இருப்பின் 20 கிலோ பெரசல்பேட்டை 5 டன் தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நெல் நுண்ணூட்ட கலவை வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story