தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்: அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்: அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழ்மொழியை வளர்க்க இன்னும் தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, உலகத்தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தேவையான புத்தகங்கள் இல்லை. தமிழ் புத்தகங்கள் வாங்குவதற்கு வெறும் ரூ.96 ஆயிரம் செலவிட்டுவிட்டு, மற்ற நிகழ்ச்சிகளுக்கு பல லட்சங்களை செலவிடுவது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தது.

புத்தகங்கள் சேகரிப்பு

அதற்கு அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொது நூலகங்களில் சமர்ப்பிக்கப்படும் புத்தகங்கள் உலகத் தமிழ் சங்கத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களின் சேகரிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்து இருந்தது.

அறிஞர்களுக்கு பல்வேறு பரிசுகள்

இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ் மொழி இலக்கிய உள்ளடக்கம், நேர்த்தியை விளக்குவதற்காக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், அங்கிருந்து உள்ளூருக்கு வரவழைத்து தமிழ்மொழியின் வளர்ச்சியை பேணுவதற்குத்தான் உலகத்தமிழ் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பது மனுதாரரின் குறையாக உள்ளது. மனுதாரரின் இந்த கருத்துகள் பொதுவானவைதான். ஆனால் உலகத் தமிழ் சங்கத்தில், இளம் தமிழறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அதன்மூலம் தங்களது மொழித்திறமைகளை வெளிக்காட்டுபவர்களுக்கு ரொக்கம், தங்க நகைகளையும் பரிசுகளாக வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சர்வதேச, தேசிய கருத்தரங்குகள், சிறப்பு விரிவான உரைகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தப்படுகிறது என்றும் உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழை வளர்க்க தீவிர முயற்சி

எனவே, தமிழ் மொழியை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் வளர்க்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், அது நிறுவப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற உலகத் தமிழ்ச் சங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் இந்த கோர்ட்டு கருதுகிறது.

மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில், சங்கத்தமிழ் இலக்கியம் மற்றும் தற்கால தமிழ் இலக்கியங்களை இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழ்மொழியை வளர்க்க இன்னும் தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story