சிவகங்கை மாவட்டத்தில் திருடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கீரமங்கலத்தில் பறிமுதல்
சிவகங்கை மாவட்டத்தில் திருடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் கீரமங்கலத்தில் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவை திருட்டுப்போனது. இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் கீரமங்கலம், வடகாடு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கீரமங்கலத்தில் உள்ள கொத்தமங்கலத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து ஒரு லாரியில் ஏற்றி கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் நிறுத்தினர். அப்போது திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்ட தகவல் பொதுமக்களிடம் பரவியது.
கைது
இதையடுத்து, லாரியில் ஏற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் மேற்பனைக்காடு சாலையில் உள்ள ஒரு பழைய அரிசி ஆலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சாக்கோட்டை, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை கீரமங்கலத்தை சேர்ந்த பலர் குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதனை அடகு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கில் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்
இதேபோல் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மர்ம ஆசாமிகள் விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருட்டுபோன மோட்டார் சைக்கிள்கள் கீரமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவியதால் மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்த பலர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.