அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரிவசூல் செய்ய வேண்டும்; கலெக்டர் பேச்சு
திருவண்ணாமலை நகராட்சியில் அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரி வசூல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சியில் அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரி வசூல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
வார்டு பகுதி சபை
உள்ளாட்சி தினமான நேற்று கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் முதல்முறையாக நகர உள்ளாட்சிகளின் வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. வார்டு வாரியாக நடைபெற்ற பகுதி சபைகளுக்கு அந்தந்த கவுன்சிலர்கள் தலைமை தாங்கி கூட்ட பொருள் குறித்து பேசப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் உள்ள பச்சையம்மன் கோவில் வீதியில் நடைபெற்ற வார்டு பகுதி சபைக்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஆணையாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1-வது வார்டு கவுன்சிலர் கோவிந்தன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில் நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் வரி விகிதம் மிகவும் குறைந்த அளவாக உள்ளது. 1-வது வார்டில் மட்டும் சுமார் ரூ.39 லட்சம் வரிபாக்கி இருப்பதாக நகராட்சி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அரசால் ஒதுக்கப்படும் நிதியை வைத்து மட்டுமே நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாது.
90 சதவீதத்திற்கு மேல் வரிவசூல்
பொதுமக்கள் வரியை செலுத்தினால் தான் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். பொதுமக்களிடம் வரி கட்டணங்களை முறையாக வசூல் செய்யவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரிவசூலை வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் தூர்வார வேண்டும், பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் முதல் முறையாக நடைபெற்ற வார்டு பகுதி சபை கூட்டத்தில் ஆர்வமாக கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் மந்தாகினி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்்கன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.