மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
பரிசோதனை மையம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான ஆர்.பி.டி.சி.ஆர்-சி.பி. என்.ஏ.ஏ.டி. அதிநவீன காசநோய் பரிசோதனை மைய திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி மையத்தை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்தமாக 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 10 சதவீத நிலையங்கள் வாடகை கட்டிடத்திலும், பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையிலும், சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. எனவே 15- வது நிதிக் குழு ஆணையம் நிதியின் கீழ் அக்கட்டிடங்களை சொந்த கட்டிடங்களாக கட்டுவதற்கான நடவடிக்கையினை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இயன்முறை மருத்துவம், ரத்த சுத்திகரிப்பு உள்பட 5 வகை பிரச்சினைகளுக்கான தீர்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 ஆயிரத்தையும் தாண்டி வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கின்றது.
காசநோய் இல்லாத தமிழகம்
தமிழக முதலமைச்சரால் திருச்சி மாவட்டம் சன்னாசிபட்டி கிராமத்தில் கடந்த 29.12-22-ந் தேதி அன்று நடைபெற்ற அரசு விழாவில் காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு காசநோயை கண்டறிவதற்கான 46 அதி நவீன கருவிகள் ரூ.11 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. இக்கருவிகள் அனைத்து மாவட்டங்களிலும் தலைமை மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், டிஜிட்டல் எக்ஸ்ரே உடன் கூடிய 28 நடமாடும் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். இந்த வாகனங்கள் தமிழ்நாட்டின் மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள் என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று காசநோய் அறிகுறி காணப்படும் மக்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து துல்லியமாக கண்டறிந்து, தற்போது அவர்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.
2025 -ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு இந்த அதி நவீன கருவிகள் பயனுள்ளதாக உள்ளது. வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 46 -வது அதிநவீன இக்கருவி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன கருவியால் காசநோயினை 2 மணிநேரத்தில் அறிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கமலராகவன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி, துணை இயக்குனர் (காசநோய்) ஜெயஸ்ரீ, தலைமை மருத்துவர் உஷா நந்தினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.