1081 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
1081 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்
முத்தூர்
திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக
1081 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ள நிலையில் சின்ன முத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
அரசு ஆரம்ப பள்ளிகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி 2-ம் ம் கட்டமாக 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37 ஆயிரத்து 18 மாணவ, மாணவிகள், 16 பேரூராட்சிகளில் 105 பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 339 மாணவ, மாணவிகள், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 648 மாணவ, மாணவிகள் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27 ஆயிரத்து 477 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1081 பள்ளிகளில் பயிலும் 75 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா முத்தூர் அருகே உள்ள சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காலை உணவு திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு ஆகும். இதன்படி அரசு ஆரம்ப பள்ளிகளில் கற்கும் கல்விதான் உயர் கல்விக்கு வழிவகுக்கும். எதிர்கால சமூகத்தை உருவாக்கும். இந்த முதலமைச்சரின் காலை திட்டத்தின் முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் 1429 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நான் படித்த முத்தூர் அருகே உள்ள சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த திட்டத்தின் படி பள்ளி வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை நேரத்தில் சேமியா உப்புமா, ரவா கிச்சடி, காய்கறி கிச்சடி, வெண் பொங்கல், காய்கறி சாம்பார், கோதுமை ரவா கேசரி ஆகியவை தினந்தோறும் சுழற்சி முறையில் பிரித்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழா நிறைவாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சின்ன முத்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி விட்டு அவர்களுடன் தரையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார். முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது சொந்த செலவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சில்வர் தட்டுகள், டம்ளர்கள் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.