போலி பத்திரம் மூலம் மோசடி புகார்
திருப்பூர், ஆக.15-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அனுப்பர்பாளையத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை சிலர் போலி கிரையம் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் 2 முறை விசாரணை நடந்தது. ஆனால் மோசடி கும்பல் எங்கள் பகுதிக்கு வந்து எங்களை மிரட்டியும், நாங்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையையும் சேதப்படுத்தினார்கள். 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட பதிவாளரிடம் விசாரணை முடிந்து 10 மாதங்கள் ஆகிய பிறகும் இறுதி ஆணை பிறப்பிக்காமல் உள்ளது. எனவே போலி பத்திரத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.