உடுமலை பகுதியில் அதிகரிக்கும் கொசு உற்பத்தி


உடுமலை பகுதியில் அதிகரிக்கும் கொசு உற்பத்தி
x

உடுமலை பகுதியில் கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதால் பல்வேறு விதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதால் பல்வேறு விதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இனப்பெருக்கம்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சின்ன கொசுக்கள் ஆனால் பெரிய தொல்லை என்று கொசுக்களைப் பற்றி விமர்சனம் செய்வதுண்டு.டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்களைப் பரப்பும் தூதுவனாக கொசுக்கள் செயல்படுகின்றன.

மழைக்காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு பெருமளவு கைகொடுக்கிறது.

வீதிகளில் தூக்கி எறியப்படும் பாலிதீன் கழிவுகள், தேங்காய் தொட்டிகள், பழைய டயர்கள் மற்றும் பயன்படாத பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.

எனவே மழைக்காலங்களில் கொசுக்களின் உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த நகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதன்படி வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியாவதைத் தடுக்க அபேட் மருந்து தெளித்தல், வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க வலியுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சாக்கடை கால்வாய்கள்

ஒருசில நேரங்களில் வீதிகளில் கொசுப் புகை மருந்து அடிக்கப்படுகிறது. ஆனால் இதனால் எந்த விதமான பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. புகை மண்டலத்துக்கு நடுவிலேயே கொசுக்கள் சுதந்திரமாக உலா வருவதைப் பார்க்கும் போது இந்த மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகிறது.மேலும் சாக்கடை கால்வாய்கள் தூர் வாருவதில் பல பகுதிகளில் அலட்சியம் காட்டப்படுகிறது.

குறிப்பாக பைபாஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலையோரங்களில் உள்ள சாக்கடை கால்வாய்கள் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலைகளில் கழிவுகளுடன் கலந்து வழிகிறது.

அத்துடன் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்களும் பரவும் நிலை உள்ளது. இதுபோன்ற தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் மட்டுமல்லாமல் எலிகளும் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்புகின்றன.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக்கடை கால்வாய்களைத் தூர் வாரவும், தரமான கொசு ஒழிப்பு மருந்துகளைப் பயன்படுத்தி கொசுக்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story