ஒரே நாளில் 2,919 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி


ஒரே நாளில் 2,919 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி
x

சென்னையில் ஒரே நாளில் 2,919 தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில் கடந்த சனிக்கிழமை மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் மட்டும் மழைநீர் வடிகாலில் 250 கி.மீ. நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 239 கி.மீ நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 58.34 கி.மீ. நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2,919 தெருக்களில்...

ஒரே நாளில் 2,919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் எந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு புகைபரப்பும் பணியும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. 16 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல் பக்கிங்காம் கால்வாயில் படகு மூலம் மாநகராட்சி ஊழியர்கள் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளித்தனர்.

மரக்கன்று நடும் பணி

அதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில், அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்புவேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பில் நடைபாதை அமைத்தல், 60,000 மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துக்குள்

ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராயபுரம், மண்டலத்துக்கு உட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையிலும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரையிலும் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை சமப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும்.

ரூ.5 கோடியில் புதிய பூங்கா

பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 786 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒப்பந்த முறையிலும், தத்தெடுப்பு முறையிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 584 பூங்காக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் உள்ள மின்ட் மேம்பாலத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பூங்காவில் நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், யோகா பகுதி, சிலைகள் மற்றும் சுவரோவியங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய கட்டமைப்பு, இருக்கை வசதிகள், மின்வசதி, கழிவறை மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். இந்த பூங்கா பணி ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story