போக்குவரத்து தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்பு அமைச்சர் சிவசங்கர் பேட்டி


போக்குவரத்து தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்பு அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x

குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊழிய ஒப்பந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தாம்பரம்,

தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர், துணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 66 பேரவை தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

அடிப்படை ஊதியம்

கடந்த மே மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 31-08-2019 அன்று பணியாளர்கள் பெற்று வந்த அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டு கணக்கீடு செய்து, அந்த அடிப்படை ஊதியத்தின் படி 01-01-2022-ல் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பேட்டா உயர்த்தி வழங்குவது தொடர்பான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா கால கட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு ஒருமுறை சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு முறை மட்டும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1,078 தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மலைவாழ்படி

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான படிகளில் உயர்வு அளிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு சலவைப்படி, தனிபேட்டா, ஸ்டியரிங் அலவன்ஸ், ரிஸ்க் அலவன்ஸ், ரீபில் அலவன்ஸ், இரவு பணிப்படி, இரவு தங்கல் படி ஆகியவற்றுக்கு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மலைவாழ் பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, மலைவாழ்படி ரூ.1500 என்று உள்ளதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு அந்த போராட்டங்களில் பங்கேற்று அவர்கள் பணிக்கு வராத காலங்கள் முறைப்படுத்தப்பட்டு, அக்காலத்தை பணி தொடர்ச்சிக்கு எடுத்துக்கொண்டு ஆய்வுபலன் வழங்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்பு

இன்றைய கூட்டத்தில் மேலும் சில கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவற்றை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான தீர்வுகள் எட்டப்படும்.

நான் இந்த துறைக்கு பொறுப்பேற்ற பிறகு முதற்கட்டமாக கடந்த பேச்சுவார்த்தையில் அறிவிக்கப்பட்டவைகளும், 2-ம் கட்டமாக இந்த கூட்டத்தில் இன்னும் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டவைகளும் சேர்த்து தொழிற்சங்கங்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சில கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கான தீர்வு பெறப்பட்டு விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. கூறும்போது, "பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கங்கள் அளித்த முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யபடவில்லை என்றால் கூட்டு குழு சார்பில் முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம்" என்றார்.

அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சூரிய மூர்த்தி கூறும்போது, "இந்த பேச்சுவார்த்தையில் மன நிறைவை அளிக்கும் வகையில் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். அதற்கு அமைச்சர், இந்த கூட்டத்தில் அதை முடிவு செய்ய முடியாது. முதல்-அமைச்சருடன் பேசி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்" என்றார்.


Next Story