பாலில் விஷம் கலந்து குடித்து தாய்-மகள் தற்கொலை
குடும்ப வறுமையால் பாலில் விஷம் கலந்து குடித்து தாய்- மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப வறுமையால் பாலில் விஷம் கலந்து குடித்து தாய்- மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய்- மகள்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெருவை சேர்ந்தவர் சுல்தானா (வயது 45). இவருக்கு சம்சு (22), ஜாபியா (21) ஆகிய மகள்கள் இருந்தனர். இவருடைய கணவர் முகமது அப்பாஸ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். சுல்தானா, கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். கடந்த 9-ந் தேதி ஜாபியா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது தாய் சுல்தானா, அக்காள் சும்சு இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பாதி மயக்க நிலையில் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த ஜாபியா இருவரையும் கண்டு கதறி அழுதார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அப்போது, சுல்தானா விஷம் குடித்து விட்டதாக கூறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாபியா இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாலில் விஷம்...
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுல்தானாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தேன். வறுமை ஒருபக்கம், எனக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மூத்த மகள் திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தாள்.
இதில் மனம் உடைந்த நான், மூத்த மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதற்காக பாலில் விஷம் கலந்து குடித்தேன் என்று வேதனையுடன் சுல்தானா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சம்சு திடீரென உயிரிழந்தார். தொடர்ந்து நேற்று அதிகாலையில் தாய் சுல்தானாவும் பரிதாபமாக இறந்தார். தாய், அக்காள் இருவரது உடல்களையும் பார்த்து ஜாபியா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப வறுமையால் இளைய மகளை தவிக்க விட்டு விட்டு மூத்த மகளுடன் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.