டெம்போ மீது பஸ் மோதிய விபத்தில் தாய், மகன் காயம்


டெம்போ மீது பஸ் மோதிய விபத்தில் தாய், மகன் காயம்
x

டெம்போ மீது பஸ் மோதிய விபத்தில் தாய், மகன் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

டெம்போ மீது பஸ் மோதிய விபத்தில் தாய், மகன் காயம் அடைந்தனர்.

விபத்து

ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் லிங்க ராஜா (வயது 32), டிரைவர். இவருடைய தாயார் கலா (55), வைராகுடியிருப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு தேவையான விறகு வாங்குவதற்கு லிங்கராஜா வைராகுடியிருப்பை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மினி டெம்போவை எடுத்துக்கொண்டு தாயார் கலாவுடன் பாம்பன்விளை அருகே உள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்றார்.

அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டெம்போ மீது மோதியது. இந்த விபத்தில் லிங்கராஜாவும், கலாவும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் கலாவிற்கு கை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் மின்கம்பமும் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது. பின்னர் பாபு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சை கொண்டு சென்றார். அப்போது அந்த பஸ், பருத்திவிளை சந்திப்பில் வைத்திருந்த பேரிகார்டு மீது மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story