மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி
காரிமங்கலம் அருகே துணியை காய வைக்க சென்றபோது மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலியாகினர். காப்பாற்ற சென்ற பெண்ணும் பரிதாபமாக இறந்தார்.
காரிமங்கலம்
துணி காய வைக்க
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி ஒடச்சக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாது. விவசாயி. இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 55). இவரது மகன் பெருமாள் (32). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மேகனா என்ற மனைவி உள்ளார். பெருமாளின் அத்தை சரோஜா (55). மாது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் மாதம்மாள் வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு துணி காய வைக்க கம்பி கட்டி வைத்திருந்தார். நேற்று காலை மாதம்மாள் துணி துவைத்து காயவைக்க சென்றார். அப்போது மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனால் மாதம்மாள் கம்பியை இழுத்து மின்கம்பத்தில் கட்ட முயன்றார்.
மின்சாரம் தாக்கியது
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனைப் பார்த்த பெருமாள் தாயை காப்பாற்ற சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. தாய்-மகன் 2 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை அறிந்த பக்கத்து வீட்டில் வசித்த பெருமாளின் அத்தை சரோஜா அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மின்சார டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்கள் தாய்-மகன் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதைக்கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கும், பண்ணந்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர், மின்சாரம் தாக்கி இறந்த மாதம்மாள், பெருமாள், சரோஜா ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.