அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய்-குழந்தை பலி
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தார். குழந்தையும் பலியானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). பட்டாசு தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (32). 14 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது முத்துமாரி கர்ப்பம் அடைந்தார்.
இந்தநிலையில் சிவகாசியில் முதல் கட்ட சிகிச்சை மேற்கொண்டபின் பிரசவத்திற்காக அவர் கடந்த 22-ந் தேதி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தாய்-குழந்தை சாவு
முத்துமாரிக்கு சுகப்பிரசவத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென முத்துமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது தொப்புள் கொடி பிரிந்து விட்டதால் கர்ப்பப்பையில் இருந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே முத்துமாரியின் உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் முத்துமாரியும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் முத்துமாரியும், குழந்தையும் இறந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். அத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வுக்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை இறந்த முத்துமாரியின் கணவர் பன்னீர்செல்வமும், அவரது உறவினர்களும் சந்தித்தனர். அப்போது எனது மனைவியையும், குழந்தையையும் கொன்று விட்டதாக கூறி பன்னீர்செல்வம் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு, டாக்டர்கள் உயிரை காப்பாற்ற தான் முயற்சி செய்வார்கள். ஏதோ நடந்து விட்டது. உடல் பரிசோதனைக்கு பின்பு இதுபற்றி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.