மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாய்-குழந்தை பலிகிருஷ்ணாபுரம் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாய்-குழந்தை பலிகிருஷ்ணாபுரம் அருகே பரிதாபம்
x
தர்மபுரி

தர்மபுரி

கிருஷ்ணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் 11 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் மோதி விபத்து

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி ஜோதி (வயது 35). இவர்களுக்கு 11 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. பிரபு தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் ஜல்லி கிரசரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் குடும்பத்தினருடன் கம்பைநல்லூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பிரபுவின் குழந்தைக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையை தர்மபுரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் கம்பைநல்லூருக்கு சென்றனர். செங்கல்மேடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தாய்- ஆண் குழந்தை பலி

இந்த விபத்தில் ஜோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரபு மற்றும் 11 மாத குழந்தை படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணாபுரம் போலீசார் விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தாய் மற்றும் 11 மாத குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story