காதல் திருமணம் செய்து மாணவி அனுப்பிய படத்தால் தாய் தற்கொலை
வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டு தம்பதி சகிதமாக மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் படத்தால், அந்த மாணவியின் தாயார் தற்கொலை செய்துகொண்டார்.
தேவகோட்டை,
வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டு தம்பதி சகிதமாக மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் படத்தால், அந்த மாணவியின் தாயார் தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை எம்.எம். நகரை சேர்ந்தவர் நடராஜன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான 19 வயது மாணவி ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அந்த மாணவி, காதலிக்கும் வாலிபரையே திருமணம் செய்யப்போவதாக தாயாரிடம் கூறினார்.
தாய் தற்கொலை
சில நாட்களுக்கு முன்பு திடீரென மாணவி வீட்டை விட்டு வெளியேறினார். தனது காதலருடன் சென்று அவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தம்பதி சகிதமாக எடுத்துக்கொண்ட படத்தை தனது தாய் பாண்டியம்மாளுக்கு வாட்ஸ்-அப் மூலம் அந்த மாணவி அனுப்பியுள்ளார். மேலும் தங்களை தேடாதீர்கள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மனவருத்தம் அடைந்த பாண்டியம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.