தங்க சங்கிலி திருடிய தாய்-மகள் கைது


தங்க சங்கிலி திருடிய தாய்-மகள் கைது
x

தங்க சங்கிலி திருடிய தாய்-மகள் கைது

கோயம்புத்தூர்


கோவை நகை கடையில், நகை வாங்குவதுபோல் நடித்து நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலியை திருடிய தாய்-மகளை போலீசார் கைது செய்தனர்.

நகை வாங்க சென்றனர்

கோவை கடைவீதி ராஜவீதியில் உள்ள ஒரு கடைக்கு கடந்த மாதத்தில் 2 பெண்கள் நகை வாங்க சென்றனர். அவர்கள் பர்தா அணிந்து இருந்தனர். அந்த 2 பெண்களும் அந்த கடையில் இருந்த ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அதன்படி கடையில் உள்ள ஊழியர்கள் ஒவ்வொரு செயினாக எடுத்து காண்பித்தனர்.

அதில் ஒரு தங்க சங்கிலியை தேர்வு செய்த அந்த பெண்கள் அதன் எடை எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க சொன்னார்கள். உடனே ஊழியர்கள் அதன் எடையை பார்த்தபோது 40 கிராம் (5 பவுன்) இருந்தது. அதன் விலை எவ்வளவு என்று கேட்டதற்கு, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேல் வரும் என்று கூறினார்கள்.

கவரிங் நகை

அதற்கு அந்த பெண்கள் தற்போது அவ்வளவு பணத்தை நாங்கள் எடுத்துவிட்டு வரவில்லை. வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துவிட்டு மாலையில் மீண்டும் வருகிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து அந்த பெண்கள் தேர்வு செய்த நகையை கடை ஊழியர்கள் பத்திரமாக தனியாக எடுத்து வைத்தனர். ஆனால் அவர்கள் இரவு நேரம் ஆகியும் வரவில்லை. உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகை வாங்குவது போல் நடித்து 2 பெண்கள் அந்த கடையில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இவ்வாறு 2 பெண்கள் நூதன முறையில் கை வரிசை காட்டியது அம்பலமானது.

தாய்-மகள் கைது

இது குறித்த புகாரின்பேரில் கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நகையை திருடிச்சென்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழமாதிரையை சேர்ந்த சுமதி (வயது 50), அவருடைய மகள் பிரியதர்ஷினி (28) என்பதும் அவர்கள் மீது சென்னை, மதுரை, அரக்கோணம், திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story