தாறுமாறாக ஓடிய பஸ் மோதி தாய்-இளம்பெண் பலி
மினிலாரி திடீரென மோதியதால் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பஸ் மோதி, தாய்-இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கீழக்கரை,
மினிலாரி திடீரென மோதியதால் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பஸ் மோதி, தாய்-இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாறுமாறாக ஓடிய பஸ்
தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி வழியாக சென்னையை நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தூத்துக்குடியை சேர்ந்த சண்முகம்(வயது 45) ஓட்டினார்.
அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே மண்டபத்தில் இருந்து வாலிநோக்கம் நோக்கி வந்த மினி லாரி, திடீரென்று பஸ் மீது மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பயணிகள் அலறினர்.
2 பெண்கள் பலி
சின்னமாயாகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் ஒரு கல்லூரி தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு தோப்புக்குள் பாய்ந்து நின்றது.
பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த 2 பெண்கள், பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆண் ஒருவர் உயிர் தப்பினார்.
7 பேர் காயம்
மேலும் பஸ் டிரைவர் சண்முகம் (45), அதில் பயணம் செய்த ராமேசுவரத்தை சேர்ந்த ஸ்டெபி மலர் (20), போகலூர் அரசு மருத்துவமனை செவிலியராக பணிபுரியும் ஆறுமுகநேரியை சேர்ந்த ரோசின் ஹன்னா (29), தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா (73), மினிலாரி டிரைவரான மண்டபத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25), ராமநாதபுரம் களஞ்சியம் (48), சுந்தரமடையான் குமார் (52) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்-மகள் பலி
விபத்தில் பலியான பெண்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாயாக்குளம் ஊராட்சியை சேர்ந்த பார்வதி(வயது 55), அவரது மகள் குப்பம்மாள்(34) என்பதும், ஏர்வாடி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது விபத்தில் பலியானதும் தெரியவந்தது. இதில் குப்பம்மாளுக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர். குப்பம்மாள் அவரது கணவரை பிரிந்து மகள்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விபத்து கீழக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.