ஆண் நண்பருடன் சென்ற 2 வயது குழந்தையின் தாய் மீட்பு
ஆண் நண்பருடன் சென்ற 2 வயது குழந்தையின் தாயை போலீசார் மீட்டனர்.
மேச்சேரி:-
ஜலகண்டாபுரம் அருகே 2 வயது குழந்தையின் தாய், மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆண் நண்பருடன் சென்றிருந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 குழந்தைகளின் தாய் மாயம்
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 28 வயதுடைய விவசாயிக்கு, 22 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த 2 வயது குழந்தையின் தாய் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே அதே ஊரை சேர்ந்த 28 வயதான திருமணமாகாத மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஒருவரும் திடீரென மாயமானார். அவர் தான் அந்த 2 குழந்தைகளின் தாயை அழைத்து சென்றிருக்கலாம் என்று அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் மாமனார் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் மருமகள் மாயமானது குறித்து புகார் அளித்தார். அதில், வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, அதே ஊரை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குடன் எனது மருமகள் ஓடி இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் பெண் மாயமானது குறித்து ஜலகண்டபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
முற்றுகை
இதனிடையே மாயமான அந்த பெண்ணையும், மோட்டார் சைக்கிள் ெமக்கானிக்கையும் போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு நேற்று கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர், உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
:-சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள், அந்த பெண்ணை கூட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களின் போராட்டம் காலை 8.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது.
தகவல் அறிந்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ஜலகண்டாபுரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டத்திற்கு உட்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி கைது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்
இதனிடையே மீட்கப்பட்ட அந்த பெண்ணை மேட்டூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் கோவிலுக்கு சென்றதாகவும், பாதுகாப்புக்காக ஆண் நண்பரான மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கை அழைத்து சென்றதாகவும் அவர் கூறிஉள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தினருடன் செல்வதாக நீதிபதியிடம் கூறி உள்ளார்.
பின்னர் அந்த பெண் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. முன்னதாக அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ஜலகண்டாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.