தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை பெண் குழந்தை பிறந்ததால் விபரீத முடிவா?


தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை பெண் குழந்தை பிறந்ததால் விபரீத முடிவா?
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 55). விவசாயம் செய்து வந்தார். இவரது கணவர் சேகர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சந்தோஷ், சுதாகர், முரளி என 3 மகன்கள்.

இவர்களில் சந்தோஷ், சுதாகர் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 3-வது மகன் முரளிக்கும் (27), புத்துக்கோயில் பகுதியை சேர்ந்த இந்துஜாவுக்கும் (20) ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவகாமி அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த இந்துஜாவுக்கு நேற்று முன்தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கணவர் முரளி மற்றும் முரளியின் தாயார் சிவகாமி ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பெண் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பூட்டிய வீட்டில் பிணங்கள்

நேற்று மதியம் வீட்டில் யாரும் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் அருகாமையில் இருந்தவர்கள் சிலர் அவர்களிடம் ஏதோ பொருளை வாங்க வீட்டிற்கு சென்ற போது சிவகாமி ஒரு அறையிலும், முரளி மற்றொரு அறையிலும் ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளே சென்று பார்த்ததில் இருவரும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மருத்துவமனைக்கு சென்று பிறந்த பெண் பிள்ளையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய நிலையில்தான் இருவரும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு சொத்து உள்ள நிலையில் ஆண் வாரிசு பிறக்காமல் பெண் குழந்தை பிறந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story