தேவநாதசுவாமி கோவிலில் தாயார் உற்சவம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தாயார் உற்சவம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் தாயார் உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கடந்த 14- ந்தேதி தாயார் உற்சவம் தொடங்கியது. அதனை தொடர்ந்து தேவநாதசுவாமி மற்றும் தாயாருக்கு தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி வீதிஉலாநடைபெற்றது. நேற்று தாயார் உற்சவம் நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி செங்கமலதாயாருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரதசப்தமி
இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி கோவிலில் ரதசப்தமி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர் கோவில் முன்புள்ள அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி தேவநாதசுவாமி எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.