சேந்தமங்கலம் அருகே பயங்கரம்தாயின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை
சேந்தமங்கலம் அருகே தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம்
டிராக்டர் டிரைவர்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). டிராக்டர் டிரைவர். இவர், அங்குள்ள மெயின்ரோட்டில் நேற்று காலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்தவுடன் சுரேஷின் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தலையில் பலத்த காயம் இருந்தது. எனவே சுரேஷ் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
கல்லூரி மாணவர் கைது
விசாரணையில், ெபாட்டிரெட்டிபட்டியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சந்துரு, சுரேசை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்துருவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சுரேஷின் மனைவி அழகம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே அவர் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். சுரேஷ், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு சந்துருவின் தாய் கஸ்தூரியும் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுரேஷ் தன்னுடைய மனைவி இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதேபோல் சந்துருவின் தாய் கஸ்தூரியும் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
ரகசிய சந்திப்பு
முதலில் சாதாரணமாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் சுரேசுக்கும், கஸ்தூரிக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். அதன்பிறகு சுரேஷ் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு கஸ்தூரி வீட்டுக்கும், கஸ்தூரி தன்னுடைய மகன் சந்துருவை அழைத்துக்கொண்டு சுரேஷ் வீட்டுக்கும் சென்று வந்துள்ளனர். இப்படியாக இவர்களது உறவுமுறை இருந்துள்ளது.
இதற்கிடையே சுரேஷ், கஸ்தூரி கள்ளக்காதல் விவகாரம் அரசல்புரசலாக அக்கம் பக்கத்தில் தெரியவந்தது. ஊரில் உள்ளவர்கள் கஸ்தூரியின் கள்ளக்காதல் பற்றி பேச தொடங்கியதாக தெரிகிறது. இது சந்துருவுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்துள்ளது.
அடித்துக்கொலை
இதுதொடர்பாக சுரேஷிடம் பேசிய சந்துரு, இனிமேல் தன்னுடைய வீட்டுக்கு வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அப்படி இருந்தும் சுரேஷ், கஸ்தூரியை பார்க்க அடிக்கடி பொட்டிரெட்டிப்பட்டிக்கு வந்துள்ளார். இதனால் சந்துரு, சுரேசின் மகள் சரண்யாவை தொடர்பு கொண்டு, உன்னுடைய அப்பாவை இனி எங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என சொல்லி விடு எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது.
அப்படி இருந்தும் நேற்று முன்தினம் சுரேஷ் பொட்டிரெட்டிப்பட்டிக்கு கஸ்தூரியை சந்திக்க வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு, சுரேசை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடலை ஆட்டோவில் ஏற்றி ராமநாதபுரம் புதூர் ரோட்டில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த சுரேசை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரபரப்பு
சந்துரு, ஆட்டோவில் ஏற்றி சென்று சுரேஷ் உடலை வீசி விட்டு வந்துள்ளதால் இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதவிர உடலை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோ எங்கே, அதன் உரிமையாளர் யார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தாயின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.