மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம்;
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே உள்ள அனந்தபுலியூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் மாதவன் (வயது28). செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தனது கடைக்கு தேவையான செல்போன் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் கடையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தாராசுரம் அனுமார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30) மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.