மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தந்தை கண்முன்னே மாணவன் பலி
வேப்பூர் அருகே பழுதான சைக்கிளை சரிசெய்ய சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை கண்முன்னே மாணவன் பலியானான்
ராமநத்தம்
பழுதான சைக்கிள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகன் தியாகராஜன் (வயது 40). இவரது மகன் மாதவன்(17). பிளஸ்-2 படித்து முடித்துள்ள இவர் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக நேற்று மாலை தியாகராஜனுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு தூக்கிச் சென்றார்.
கழுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஒன்று தியாகராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாதவன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தியாகராஜன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தீவிர சிகிச்சை
இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், தியாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண் முன்னே மாணவன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.