மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை சாவு; மற்றொருவர் படுகாயம்


மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை சாவு; மற்றொருவர் படுகாயம்
x

திருவள்ளூர் அருகே மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருவள்ளூர்

புதுமாப்பிள்ளை

திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இவரது மனைவி புவனேஸ்வரி. அதே ஊரை சேர்ந்தவர் விஜய் என்ற விஜயகுமார் (28). இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே கயலான் கடை வைத்திருப்பதாகவும் மது பாட்டில்களை மொத்தமாக எடுத்து தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 பேரும் தொழில் சம்பந்தமாக திருவள்ளூர் வந்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

சாவு

பெரியகுப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது மணவாளநகர் அருகே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜய் என்ற விஜயகுமாருக்கு பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து விஜயகுமார் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் அஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தம்பாக்கம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (24). இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து திடீரென கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிசிக்சை பலனின்றி நேற்று முன்தினம் மகேஷ் இறந்தார். இது குறித்து மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story