மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகமது. இவரது மகன் ஜாபர் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷகிம்ஷா (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். மேலும் கூடலூர் செம்பாலா பகுதியில் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் கூடலூரில் இருந்து தேவர்சோலைக்கு ஜாலியாக சென்று வர பயணம் மேற்கொண்டனர். மோட்டார் சைக்கிளை ஜாபர் ஓட்டினார். பின்னால் ஷகிம்ஷா அமர்ந்திருந்தார். தொடர்ந்து தேவர்சோலைக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கூடலூர் வந்து கொண்டிருந்தனர்.

வாலிபர் பலி

அப்போது அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 3-ம் மைல் மீனாட்சி பகுதியில் ஒரு வளைவில் திரும்ப முடியாமல் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்தில் நின்றிருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஷகிம்ஷா படுகாயம் அடைந்தார். இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் படுகாயம் அடைந்த ஷகிம்ஷாவை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜாபர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story