லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2023 7:00 PM GMT (Updated: 11 Oct 2023 7:01 PM GMT)

பொள்ளாச்சி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்

மதுரை மாவட்டம் ஆளவந்தானை சேர்ந்தவர் சரவணன் (வயது 22). சிவில் என்ஜினீயர். இவரது நண்பர் வண்டியூர் மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (22). கொத்தனார். இவர்கள் 2 பேரும் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வால்பாறை அருகே உள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர்.

பின்னர் கேரளா மாநிலம் சாலக்குடி வழியாக மதுரை செல்வதற்கு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டி வந்தார். பின்னால் விக்னேஷ் அமர்ந்து இருந்தார்.

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி முன் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன், விக்னேஷ் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

விக்னேஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story