லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினியரீங் மாணவர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினியரீங் மாணவர் பலி
x

நெய்வேலி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினியரீங் மாணவர் பலியானார். நண்பர்களுடன் பிறந்தநாள் பரிசு வாங்கி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடலூர்

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவரது மகன் தமிழ்மாறன் (வயது 20). இவர் அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தமிழ்மாறனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பரிசு கொடுக்க அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (17), திருப்பதியான் (16) ஆகியோர் முடிவு செய்தனர்.

லாரி மீது மோதல்

இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு புறப்பட்டனர். பின்னர் அங்கு தமிழ்மாறனுக்கு பிறந்த நாள் பரிசாக சஞ்சய், திருப்பதியான் ஆகியோர் பொம்மை ஒன்று வாங்கினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தமிழ்மாறன் ஓட்டினார். இந்திரா நகர் அடுத்த தனியார் அரிசி ஆலை அருகே வந்தபோது, அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

மாணவர் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ்மாறன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சஞ்சய், திருப்பதியான் ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே விபத்தில் இறந்த தமிழ்மாறனின் உடலை நெய்வேலி நகர போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாள் அன்று விபத்தில் என்ஜினியரீங் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story